Archive for ஜூலை, 2007

புரிதல்

ஜூலை 29, 2007

மங்கிய மாலை வேளையில்
மதுக்கோப்பையுடன் நான்
மதுவின் வழியே கோப்பையின் அடியில்
தெரிகிறது முடிவு
முடிவை நோக்கிய பயணம்
தொடங்கும் முன்னே தடுத்தன
தோழர் கைகள்
சமமாய் பிரித்தனர் மதுவை
அளவாய் கலந்தனர் மிதநீர்
கலந்த மதுவில் கலங்கித் தெரிந்தன
எங்கள் அனைவர் உருவமும்
கலந்த தண்ணீர் அடைத்துக் கொண்டது
முடிவின் வழியை
அடைத்த வழியில் அழகாய் நிற்பது
அவர்கள் உருவம்
உருவம் பார்த்தே உரத்த குரலில்
முழக்கம் செய்தேன்
மதுவின் உள்ளே மிதநீர் கலந்தது
நானே என்று.

உன்னோடு பேசும் அபூர்வ வினாடிகள்

ஜூலை 9, 2007

விரல்களை சேர்த்து உள்ளங்கை காட்டி
வரம் தரும் விஷ்ணு போல் நிற்கிறாய் – நான்
உள்ளங்கை மடக்கி உருவான ரேகை
வில்லங்கம் ஏதும் செய்யாமல் இருக்க – உன்
உருவத்தை வணங்க ஊரே சொல்கிறது.
உன் வார்த்தைகளை மட்டும் வாசிக்கத்
தருகிறாய் – அதன் மேல் அமர்ந்திருக்கும்
உன்னிலிருந்து வடியும் சேறு
உன்னைக் காட்டிக் கொடுத்து விடுகிறது.
அறியாமையை அரியணை யாக்கி
அழகாய் அமர்ந்திருக்கிறாய் அரசனாக
காலியான உன் கபாலம்
கனமான கிரீடங்களைத் தாங்குவதால்
என் முட்கிரீடத்தின் வலி
உனக்குப் புரிவதில்லை.
இருந்தும்
உன்னை நான் விரும்பவே விரும்புகிறேன் – ஆனால்
என்னை நீ விரும்புவதாய் என்னை
ஏமாற்றிக் கொள்ள முடியாது.
பசுவைப் புனிதமென்று [...]

சீர்திருத்தப்பள்ளி

ஜூலை 3, 2007

இந்த கசாப்புக்கடைக்குள்
நுழைந்த ரோஜாக்களின்
முட்கள் மட்டுமே
மீதம் இருக்கின்றன.