புரிதல்

இடப்பட்டது ஜூலை 29, 2007 by bhuvanesh
பகுப்புகள்: Uncategorized

மங்கிய மாலை வேளையில்

மதுக்கோப்பையுடன் நான்

மதுவின் வழியே கோப்பையின் அடியில்

தெரிகிறது முடிவு

முடிவை நோக்கிய பயணம்

தொடங்கும் முன்னே தடுத்தன

தோழர் கைகள்

சமமாய் பிரித்தனர் மதுவை

அளவாய் கலந்தனர் மிதநீர்

கலந்த மதுவில் கலங்கித் தெரிந்தன

எங்கள் அனைவர் உருவமும்

கலந்த தண்ணீர் அடைத்துக் கொண்டது

முடிவின் வழியை

அடைத்த வழியில் அழகாய் நிற்பது

அவர்கள் உருவம்

உருவம் பார்த்தே உரத்த குரலில்

முழக்கம் செய்தேன்

மதுவின் உள்ளே மிதநீர் கலந்தது

நானே என்று.

உன்னோடு பேசும் அபூர்வ வினாடிகள்

இடப்பட்டது ஜூலை 9, 2007 by bhuvanesh
பகுப்புகள்: Uncategorized

விரல்களை சேர்த்து உள்ளங்கை காட்டி
வரம் தரும் விஷ்ணு போல் நிற்கிறாய் – நான்
உள்ளங்கை மடக்கி உருவான ரேகை
வில்லங்கம் ஏதும் செய்யாமல் இருக்க – உன்
உருவத்தை வணங்க ஊரே சொல்கிறது.

உன் வார்த்தைகளை மட்டும் வாசிக்கத்
தருகிறாய் – அதன் மேல் அமர்ந்திருக்கும்
உன்னிலிருந்து வடியும் சேறு
உன்னைக் காட்டிக் கொடுத்து விடுகிறது.

அறியாமையை அரியணை யாக்கி
அழகாய் அமர்ந்திருக்கிறாய் அரசனாக
காலியான உன் கபாலம்
கனமான கிரீடங்களைத் தாங்குவதால்
என் முட்கிரீடத்தின் வலி
உனக்குப் புரிவதில்லை.

இருந்தும்
உன்னை நான் விரும்பவே விரும்புகிறேன் – ஆனால்
என்னை நீ விரும்புவதாய் என்னை
ஏமாற்றிக் கொள்ள முடியாது.

பசுவைப் புனிதமென்று வணங்கும் உன்முன் – நான்சில
புனிதப் பசுக்களைக் கழுத்தறுக்கும் நாள் வரலாம்
புனிதத்தின் நிறம் வெண்மை என்று – நீ
சொல்ல முடியாமல் போகலாம் அன்று.

சீர்திருத்தப்பள்ளி

இடப்பட்டது ஜூலை 3, 2007 by bhuvanesh
பகுப்புகள்: Uncategorized

இந்த கசாப்புக்கடைக்குள்
நுழைந்த ரோஜாக்களின்
முட்கள் மட்டுமே
மீதம் இருக்கின்றன.

நிழலில் தொடரும் கறை.

இடப்பட்டது ஜூன் 28, 2007 by bhuvanesh
பகுப்புகள்: Uncategorized

முட்டா ளென்பர் என்னை மூட னென்பர்
தம் பேனா மைகொட்டும் மெய்சுட்டுப்
பொய்கட்டும் வீணரும் புண்ணாவதாய் புழுகுவர்
சுத்தப் பொய்களை சூடாக விற்கும்
மெத்தப் படித்த மேதாவிகள் சிலர்.

அவர்
வெட்டிய சத்தமும் – பின் அதில்
கொட்டிய ரத்தமும்
ஞாபகம் இருக்கையிலும்
மாண்ட மனிதனை மீண்டும் வணங்கிட
என்னை அழைக்கிறாய்.

வரமாட்டேன் என்றிருந்தும் விடவில்லை நீ
வரலாறு காட்டி வரவழைக்கப் பார்த்தாய்
மசியாமல் நான்சொன்ன வார்த்தைகள் கேட்டு
வாழ்க்கையைக் காட்டி பயமுறுத்திப் பார்த்தாய்.

பயந்த நான் புகுந்த இடம் புத்தகம்
நடுக்கம் நீங்க நாடியதோ பேனா
நான் ஓடிய தூரம் கொஞ்சம்
மீதி என்பேனா ஓடிய தூரம்
அதை மிஞ்சும்.

மூச்சுமுட்ட ஓடி வந்து
மூச்சு விட்ட என் பேனா
முனை பட்டு உன் முலை கெட்டு
வடிந்தது ரத்தம்.

நிலமெல்லாம் வடிந்த ரத்தத்தால்
நிழலெல்லாம் படிந்தது கறை
வடிந்த ரத்தத்தில் குளித்து எழுந்த
எனக்கு மட்டுமே அபிஷேகம்
வருடம் முழுவதும் உறங்கிக் கிடக்கும்
அவனுக் கில்லை அலங்காரம்.

சுடுமீன்

இடப்பட்டது மே 27, 2007 by bhuvanesh
பகுப்புகள்: Uncategorized

முளைக்கின்ற வெள்ளி மீன்கள்
மூழ்காமல் நீந்தி நிற்கும்
அலைபாயும் கடலின் நடுவே
ஆயிரம் வலைகள் விரிய.

காலையில் பரிதி வரவும்
கருவிலே கலைந்து போகும்
சுடுமீன் கண் சிமிட்ட
இரவிலே வளர்ந்த கனவு.


Follow

Get every new post delivered to your Inbox.